கெங்கவல்லி, ஜூலை 22: கெங்கவல்லி பேரூராட்சியில், நடுவலூர் ஆற்று வாய்க்கால் இருகரையோரம், சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பரிந்துரையில் பேரில், சொந்த வீடு, நிலம், அரசு வேலையில் இருப்பவர்கள் தவிர மற்ற 28 பேருக்கு(90 சதுர அடியில்) நில பட்டாவை, கடந்த மாதம் கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி வழங்கினார். இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அரசு தரப்பில் உரிய இடத்தை அளந்து, அடிப்படை வசதிகளுடன் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். அதுவரை நாங்கள் குடியிருக்கும் வீடுகளில் இருந்து காலி செய்ய முடியாது என தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டு மனுவாக அளித்தனர். இது குறித்து தாசில்தார் நாகலட்சுமி கூறுகையில், ‘இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து, அவரது உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றார். இதனால் கெங்கவல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.
