திருச்சி, ஜூலை 21: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிறு கிழமையை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பக்தர்களுக்கு ஏற்ப வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு அம்மன் திறந்தவெளியில் அனைத்து பருவ நிலைகளையும் எதிர்கொண்டு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த தலம் மிகவும் சிறப்பு வாய்ந்த சக்தி தலமாக விளங்குகிறது. அந்த வகையில் ஆடி மாத வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் பக்தர்களுக்கு கூழ் வழங்க தமிழ்நாடு அரசு 2025-26 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஆடி முதல் ஞாயிற்று கிழமையை முன்னிட்டு வெக்காளி அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் வார்த்து அம்மனுக்கு நிவேதனம் முடிந்த பிறகு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோயில் துணை ஆணையர் சரவணன், கோவில் கண்காணிப்பாளர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர். இனி ஆடி மாதம் முழுவதும் பிறதி வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் வார்த்து பிரசாதமாக அளிக்கப்படும். மேலும் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் கோயிலில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
The post ஆடிமாத முதல் ஞாயிறு உறையூர் வெக்காளி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூழ் appeared first on Dinakaran.
