மக்கும் குப்பையில் இருந்து பயோ காஸ் உற்பத்தி ஆலை

சேலம், ஜூலை 21: சேலம் மாநகர பகுதிகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகளில் இருந்து பயோகாஸ் உற்பத்தி செய்யும் ஆலை, செட்டிச்சாவடியில் ரூ.57.70 கோடியில் அமைக்க, அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்குகிறது.

சேலம் மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகரில் 60 வார்டுகளிலும் தினமும் 350டன் குப்பை சேகரமாகிறது. இவ்வாறு சேகரமாகும் குப்பை, லாரிகள் மூலம் செட்டிச்சாவடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. வீடுகள் தோறும் பொதுமக்களிடம் இருந்து காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள் என மக்கும் குப்பையையும், மக்காத குப்பை பிளாஸ்டிக் கழிவுகள் என பிரித்து பெறப்பட்டு வருகிறது.

இந்த குப்பைகள் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் சேகரம் ஆகும் திடக்கழிவுகளில், மக்கும் தன்மையுள்ள கழிவுகளில் இருந்து, செரிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கும் ஆலையை அமைக்க தூய்மை இந்தியா திட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை ரூ.57.70 கோடியில் தயாரிக்கப்பட்டது. அதன்படி, தினமும் 200 டன் மக்கும் திடக்கழிவுகளை கையாளக்கூடிய ஆலை, செட்டிச்சாவடி குப்பை கிடங்கில் அமைக்கப்படுகிறது.

இயற்கை எரிவாயு(பயோ சிஎன்ஜி)ஆலையை நிறுவ ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வீடுகள், வணிக விற்பனை நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளில் இருந்து, உயிரி எரிவாயு உற்பத்தி செய்வதற்காக பொது- தனியார் பங்களிப்புடன் ஆலையை உருவாக்கப்படுகிறது. செட்டிச்சாவடியில் 8 ஏக்கர் நிலத்தில் இந்த ஆலை அமைக்கிறது.

இந்த ஆலைக்கு அமைக்க கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, செட்டிச்சாவடி பகுதியில் நிலம் அளவீடு செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 ஏக்கரில் எரிவாயு ஆலை அமைக்க கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாநகரை குப்பை இல்லாத மாநகரமாக மாற்றும் வகையில், செட்டிச்சாவடி குப்பை கிடங்கில் மக்கும் கழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிக்கும் ஆலை 57.70 கோடியில் தனியார் பங்களிப்புடன் அமைகிறது.

இதற்காக மாநகராட்சி சார்பில், 8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அளவீடு செய்து, கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 20ஆண்டுக்கு இந்த ஆலைக்கு மக்கும் குப்பை வழங்கப்படும். தினமும் 200டன் மக்கும் கழிவுகள் அளிக்கப்படும். அந்த கழிவுகளுக்கு சம்மந்தப்பட்ட ஆலை பணம் மாநகராட்சிக்கு அளிக்கும். இந்த கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ காஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு, போக்குவரத்து வாகனங்கள், ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படும்,’ என்றனர்.

The post மக்கும் குப்பையில் இருந்து பயோ காஸ் உற்பத்தி ஆலை appeared first on Dinakaran.

Related Stories: