பாடாலூர், ஜூலை 21: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தற்போது களைகட்ட துவங்கி உள்ளதால் சிலைகள் தயாரிக்கும் கைவினை தொழிலாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 2 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பரமசிவன்-பார்வதி ஆகியோருடன், பல்வேறு வாகனங்களில், சிங்கத்தின் மீது என்று விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விநாயகர் சிலைகளுக்கான பாகங்கள் தனித்தனியாக ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் பகுதிக்கு வரவழைக்கப்படுகின்றன. பின்னர் இங்கு அவற்றை நேர்த்தியாக பொருத்தி, சிலைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு முழு வடிவம் கொடுக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே இத்தொழில் நடைபெற்று வந்தது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேலான நாட்கள் உள்ள நிலையில் தற்போதே விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதால், கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
