கிருஷ்ணகிரி, ஜூலை 21: கிருஷ்ணகிரி நகரில், விதிகளை மீறி டூவீலர் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கிருஷ்ணகிரி நகரில் சிறுவர்கள் வாகனங்களை இயக்கி, அதிக அளவில் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சமீப காலங்களில் சிறுவர்கள் வாகனங்களை இயக்கியதில், விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி போக்குவரத்து எஸ்ஐ மற்றும் போக்குவரத்து போலீசார் கிருஷ்ணகிரி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அந்த வழியாக டூவீலரில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்படும் சிறுவர்களின் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களை டூவீலர் ஓட்ட அனுமதி அளிக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் 15 சிறுவர்களின் மீது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காக ரூ.5 ஆயிரமும், அனுமதித்த பெற்றோர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுவர்களை வாகனத்தை ஓட்ட அனுமதித்தால், பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதுடன் வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். மேலும் பெற்றோர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, கடும் நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
The post டூவீலர் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.
