போச்சம்பள்ளி, ஜூலை 21: பாரூர் பெரிய ஏரியிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடத்தை கடந்து நெடுங்கல் அணைக்கு செல்கிறது.
அங்கிருந்து கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கு விநாடிக்கு 161 கன அடி தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், பாசனத்திற்காக வலது மற்றும் இடது புறக்கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 102 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.பாரூர் ஏரியில் இருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கனஅடி வீதம் விநாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல் 5 நாட்களுக்கு நாற்றுநட தண்ணீர் விட்டும், பிறகு முறை வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் மொத்தம் 130 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாரூர் பெரிய ஏரியில் இருந்து தற்போது போச்சம்பள்ளி கோணணூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திருவயல் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது புளியம்பட்டி, திப்பனூர் ஏரி வழியாக பல ஏரிகளுக்கு செல்வதால், இப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. போச்சம்பள்ளி பகுதியில் சில நாட்களாக கடும் வெயில் அடித்த நிலையில், தற்போது பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு போச்சம்பள்ளி, திருவயலூர் கால்வாய் மூலம் பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, விவசாய பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
The post பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
