சென்னை: வட சென்னை பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த நூலகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சென்னையில் கூடுதலாக 36 பூங்காக்களில் நூலகங்களை விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிப்பு என்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. கட்டுரை, கதை, நாவல்கள் உள்ளிட்டவற்றை செல்போன்களில் ஒலியாகவே கேட்கும் வசதி வந்து விட்டதால் வாசிப்பு பழக்கம் முடங்கிவிட்டது.
இந்த நிலையில் பொதுமக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் மேம்படுத்தும் விதமாகவும் பூங்காக்களில் சிறிய நூலகம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர். இதில் முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சென்னை சூளை ஏ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்கா மற்றும் சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நூலகத்தில் அறிவியல், கட்டுரைகள், வரலாறு, நாவல் புத்தகங்கள் என 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் காமிக்ஸ், சிறுகதைகள் போன்ற புத்தகங்கள் உள்ளன. பூங்காவிற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்காக வருபவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து பசுமையான பூங்காவில் அமர்ந்து படிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூங்காவை பராமரிப்பவரே நூலகத்தையும் பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். புத்தகங்களை பூங்காவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும் நூலகம் தொடர்பாக பொதுமக்கள் அங்கு வைத்துள்ள நோட்டு புத்தகத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளிப்படுத்தலாம். புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காவில் நூலகம் அமைக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
எனவே, மேலும் 36 பூங்காக்களில் இந்த நூலகம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் 12 பூங்காக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகளால் பூங்காக்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பலர் பூங்காவில் இருக்கும்போது மொபைல் போன்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். இனி, பார்வையாளர்கள் புத்தகம் அல்லது செய்தித்தாள் படிக்கலாம், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மக்களிடையே வரவேற்பை தொடர்ந்து கூடுதலாக 36 பூங்காக்களில் நூலகம் அமைக்க முடிவு: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.
