கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள்

ஜெயங்கொண்டம், ஜூலை 20: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா வருகிற 23ம் தேதி (புதன்கிழமை) அமைச்சர்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர், மாமன்னன் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அந்த வகையில் 2022ம் ஆண்டுமுதல் ஆடித் திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆடித் திருவாதிரை விழா வரும் 23 ம்தேதி (புதன்கிழமை)அன்று கங்கைகொண்டசோழபுரத்தில் அமைச்சர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவினை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஆடித் திருவாதிரை விழா காலையில் மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். யாழிசை, தென்னாட்டு பெருவேந்தன் நாட்டிய நாடகம், மாபெரும் கிராமிய இசை, நடன நிகழ்ச்சி (பறை, கரகம், துடும்பாட்டம்), முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் பட்டிமன்றம், சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிருவாகத் திறனே! போர் வெற்றிகளே! என்ற தலைப்பில் நடைபெறுகிறது. பல்சுவை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மாமன்னன் ராஜேந்திரசோழன் நாடகம், மயில்காவடி, கிராமிய பாடல்கள், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மாலை வரை நடைபெறவுள்ளது.

ஆடித்திருவாதிரை விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மற்றும் தாசில்தார் சம்பத்குமார் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: