திருப்பூர், ஜூலை 20: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அணைப்பாளையம் பகுதியில் கல்லூரி சாலை மற்றும் மங்கலம் சாலையை இணைக்க கூடிய வகையிலான ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் சார்ந்த நகரமான திருப்பூரில் தமிழ் மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தொழிலாளர்கள் என மாநகரப் பகுதியில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி 8 படிநிலைகளை கடந்து வர வேண்டி உள்ளது. இதற்காக பின்னலாடை மற்றும் உப பொருட்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான சரக்கு வாகனங்களின் பயன்பாடும் அதிக அளவு இருந்து வருகிறது இதன் காரணமாக திருப்பூர் மாநகர சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில்
திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு கடந்த 2006ஆம் ஆண்டு திமுக அரசு வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில் இணைக்கக்கூடிய வகையில் மங்கலம் சாலையில் இருந்து நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய வகையில் அணைப்பாளையம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது.ரூ. 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பாலப்பணிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றுவது, நிலம் கையகப்படுத்துதல், நீதிமன்ற வழக்கு என பல்வேறு தடைகளால் பணிகள் மேற்கொள்ளப்பட முடியாமல் இருந்தது. மீண்டும் 2021 திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பாலப்பணிகளை தொடங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியிலும் திமுக வெற்றி பெற்ற நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் தலைமையில் தொடர்ந்து பாலப்பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக நிலம் கையகப்படுத்துவது மற்றும் அதற்கு உண்டான நடவடிக்கைகளை விரைவுபடுத்தினர். இதன் பலனாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு திட்ட மதிப்பீடு மாற்றப்பட்டு தற்போது பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
தற்போது உள்ள கட்டுமான பொருட்களின் விலை மற்றும் கூலி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு 42.76 கோடி ரூபாய் எனத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை இணைக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை பெரும் அளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், திருப்பூர் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானாவில் தொடங்கி திருமுருகன்பூண்டி வரை சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களை கடந்து செல்ல வேண்டிய உள்ளது. இதே மங்களம் சாலையில் இருந்து நொய்யல் ஆறு மற்றும் தண்டவாளத்தை கடந்து செல்லும் அணைப்பாளையம் பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம் மேற்கொள்ள முடியும் என வாகன ஓட்டிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பால பணிகள் கிடப்பில் இருந்ததன் காரணமாக சில ஆண்டுகளாக இணைப்பு சாலைகளில் தார் சாலை வசதி மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
தற்போது மேம்பால பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் இணைப்புச் சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. 17 தூண்களுடன் கட்டப்பட்டு வரும் இந்த பாலப்பணிகள் தற்போது வேகம் எடுத்து மங்கலம் சாலையில் இருந்து மேம்பால பணிகள் கான்கிரீட் அமைத்து தண்டவாளத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் அவ்வப்போது நெடுஞ்சாலை துறை சார்பில் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் , பாலப்பணிகள் கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்ததன் காரணமாக இணைப்பு சாலைகளும் சீரமைக்கப்படாமல் இருந்தது. தற்போது பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் இணைப்பு சாலைகள் சீர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாலம் முழுவதுமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் போது போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தற்போது திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்க கூடிய வகையில் ஒரே ஒரு ரயில்வே மேம்பாலம் மட்டுமே பிரதானமானதாக இருந்து வருகிறது. இவை முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது வாகனங்கள் மாநகரின் மையப்பகுதிகளுக்குள் செல்லாமல் அணைப்பாளையம் மேம்பாலம் வழியே செல்லும்போது மாநகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித்தனர்.
நெரிசலுக்கு தீர்வு காணும் திமுக
திருப்பூர் மாநகரின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக அரசு பல்வேறு திட்டங்களை திருப்பூருக்கு கொண்டு வந்தது. திருப்பூர் கல்லூரி சாலை மங்கலம் சாலை இணைக்கக்கூடிய வகையிலான ரயில்வே மேம்பாலம், திருப்பூர் வளர்மதி அருகே யூனியன் மில் சாலை மற்றும் பூங்கா சாலையை இணைக்கக்கூடிய வகையிலான சுரங்க பாலம் உள்ளிட்டவை தொடங்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2021 இல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர் நடவடிக்கைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட பாலம் மற்றும் சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post திருப்பூரில் போக்குவரத்து பிரச்னைக்கு விரைவில் தீர்வு; வேகம் எடுக்கும் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகள் appeared first on Dinakaran.
