தாரமங்கலம், ஜூலை 20: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே, அம்பேத்கர் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சரண்குமார்(27), சண்முகராஜ் (28) ஆகிய இருவரும் தனித்தனியாக கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் 2020ம் ஆண்டு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து, தாரமங்கலம் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் தலைமறைவாகினர். இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு, அவர்களுக்கு போக்சோ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று திருப்பூர் சென்ற போலீசார், சரண்குமார், சண்முகராஜ் ஆகியோரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.
