×

பசுமை தீர்ப்பாய எச்சரிக்கையை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் ஆயில் கழிவு: நிறுவனங்கள் அத்துமீறலால் மீனவர்கள் பாதிப்பு

திருவொற்றியூர், ஜூலை 20: எண்ணூர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், எண்ணூர் முகத்துவார ஆற்றில் இறால், நண்டு, மீன் போன்றவைகளை பிடித்து, வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த முகத்துவார ஆற்றில் எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனத்தின் ஆயில் மற்றும் சாம்பல் கழிவுகள் கலக்கிறது. இதனால் இந்த ஆற்றில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதி முகத்துவார ஆற்றில் கடந்த இரு தினங்களாக எண்ணெய் கழிவு மிகுந்து காணப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்பகுதி மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க போக முடியாமல் சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி முகத்துவார ஆற்றில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு இந்த ஆயில் கழிவுகளால் அரிப்பு மற்றும் தோல் பிரச்னை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2 வருடங்களுக்கு முன், பெருமழையின் போது உபரி நீரில் நிறுவன ஆயில் கழிவுகள் கலந்து ஏராளமான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. அலையாத்தி காடுகளும், வெளிநாட்டு பறவைகளும் வெகுவாக பாதித்தன. இந்த ஆயில் கழிவுகளை அப்புறப்படுத்த அரசு நீண்ட நாள் போராட வேண்டி இருந்தது. அதைத் தொடர்ந்து முகத்துவார ஆற்றில் கழிவுநீர் விடும் நிறுவனங்கள் மீது கடுமை நடவடிக்கை எடுக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம், ஒன்றிய, மாநில அரசுகள் எச்சரித்தன. ஆனாலும் இந்த ஆயில் கழிவுகள் ஆற்றில் கலப்பது தொடர்ந்து வருகிறது. தற்போது மீண்டும் முகத்துவார ஆற்றில் ஆயில் கழிவுகள் மிதப்பதால் மீன்வளமும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது. எனவே உடனடியாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post பசுமை தீர்ப்பாய எச்சரிக்கையை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் ஆயில் கழிவு: நிறுவனங்கள் அத்துமீறலால் மீனவர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tulur Muthuwara River ,Green Tribunal ,Thiruvotiyur ,Toliur ,Tadalanupam ,Nettakupam ,Gautukupam ,Sivan Pudai Road ,MUTAWARA RIVER ,TOLUR ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு