தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் சுமார் 4மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு கோபூஜை, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைதொடர்ந்து விநாயகர், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரம்மோற்சவம் மட்டும் என்பது தனிச்சிறப்பாகும்.

ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 28ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாடவீதியில் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். நிறைவாக 28ம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், அன்று இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். இவர்கள் பொதுதரிசனத்திற்கு ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசனத்திற்கு அம்மணியம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். தரிசன வரிசை ராஜகோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரத்தை கடந்து மாட வீதி வரை நீண்டிருந்தது. இவர்கள் சுமார் 4மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: