கோவை, ஜூலை 19: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் 2ம் கட்டம் (தொகுதி 1) கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு போலீஸ் பயிற்சி தலைமையகத்தின்கீழ் சென்னையில் நடத்தப்பட்டது.
இப்பயிற்சியானது, 15 பணியிடை பயிற்சி மையங்கள் மூலம் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய போலீஸ் ஆணையரகத்தை சேர்ந்த 93 பெண் போலீசார் முதல் பெண் சிறப்பு எஸ்ஐக்கள் வரையிலானவர்களுக்கும், தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய 8 போலீஸ் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 691 பெண் போலீசாருக்கு என மொத்தம் 784 பெண் போலீசாருக்கு அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள், அவர்களை கையாளும் முறைகள், புலனாய்வு நுட்பங்கள், வழக்கு ஆவணங்களை ஆவணப்படுத்துதல், போக்சோ மற்றும் சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தெளிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு மற்றும் அரசு உதவி குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டன.
உடலையும், மனதையும் வலுப்படுத்தும் நோக்கில் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. இறுதி நாளன்று பயிற்சி குறித்த விளக்க அமர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. தமிழக போலீஸ் பயிற்சி தலைமையக டிஜிபி சந்தீப் ராய் ரந்தூர் சான்றிதழ் வழங்கினார்.
The post பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.
