ஈரோடு, ஜூலை 19: நகரப் பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் வேகத் தடைகள் உடைந்து சேதமடைந்து வருகின்றன. ஈரோடு நகரில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் நோக்கத்தில் பிளாஸ்டிக் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் சாலைகளில் போல்டு மற்றும் நட்டு மூலமாக பொருத்தப்படுகின்றன. மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அந்த வேகத்தடைகள் மீது இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களும் சென்று வருவதால் நாளடைவில் அந்த வேகத்தடைகளில் விரிசல் ஏற்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகின்றன. சில நாட்களில் அவை முழுவதுமாக உடைந்து சிதறி விடுவதால், அவற்றை பொருத்துவதற்காக சாலையில் பதிக்கப்பட்ட போல்டு, நட்டுகள் மட்டுமே சில இடங்களில் உள்ளன.
இந்த போல்டு நட்டுகளால் அந்த வழியாகச் சென்றுவரும் வாகனங்களின் டயர்கள் சில நேரங்களில் பஞ்சராகும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, உடைந்து சிதிலமடைந்துள்ள பிளாஸ்டிக் வேகத்தடைகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் வழக்கமான முறையில் தார், ஜல்லிகற்கள் கொண்டு உடையாத வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
The post சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகள் உடைந்து சேதம் appeared first on Dinakaran.

