பெரம்பலூர், ஜூலை 19: பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக் கணக்கானோர் திரண்டு பக்தியுடன் வழிபட்டனர். ஆடி வெள்ளி என்பது அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, நிரந்தரமாக அம்பிகையின் அருள் வீட்டில் நிலைக்க செய்வதற்காக வேண்டிக் கொள்ளும் திருநாள் ஆகும். ஆடி மாதம் முழுவதும் அம்பிகை வழிபாடு செய்ய முடியாதவர்கள் கூட ஆடி வெள்ளியில் அம்பிகையை பூஜை செய்து வழிபட்டால் அளவில்லாத நன்மைகளை பெற முடியும். வழக்கமாக ஆடி மாதத்தில் 4 வெள்ளிக்கிழமைகள் வருவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக 5 வெள்ளிக் கிழமைகள் வருகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து, மஞ்சள் ஆடை செவ்வாடை உடுத்தி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்மன் வழி பாட்டுத் தலமான சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் நேற்று (18ம் தேதி) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயில் ஆதிசங்கர் வழிபாடு செய்த பெருமை கொண்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகார கண்ணகியின் சினம் தணித்த தலமாகக் கருதப்படும் இந்த கோயிலில், வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசை, புத்தாண்டு மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே நடை திறக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தங்கத்தேர் உள்ளது. இந்தக் கோயிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காலை முதல் மாலை வரை, சிறுவாச்சூர் மற்றும் அயிலூர், மருதடி, விளாமுத்தூர், செல்லியம் பாளையம், நொச்சியம், அரணாரை, நாரணமங்கலம் உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்ட அம்மன் பக்தர்கள் மட்டுமன்றி வெளிமாவட்ட பக்கதர்களும் என ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து அம்மனை வழி பட்டுச் சென்றனர்.
பெண்கள் பலர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிட கோயில் வளாகத்திற்கு உள்ளேயே உலக்கையில் மாவு இடித்து, மாவிளக்கு பூஜை செய்து அம்மனை பக்தியுடன் வழிபட்டனர். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதேபோல் அரணாரை நீலியம்மன் செல்லியம்மன் கோயில், பெரம்பலூர் ஆதிபராசக்தி கோயில் மற்றும் ஊருக்கு ஊர் அமைந்துள்ள மாரியம்மன், செல்லியம்மன், நீலியம்மன், காளியம்மன், அங்காள பரமேஷ்வரி, ஆதி பராசக்தி கோயில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
The post ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுர காளியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.
