- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்
- தின மலர்
கிருஷ்ணகிரி, ஜூலை 19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மா மரங்களில் “கல்தார்” உபயோகிப்பதை தடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் கவிதா, தோட்டக்கலை இணை இயக்குநர் இந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் பெறப்பட்ட 274 மனுக்களில், 194 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து 172 மனுக்கள் பெறப்பட்டது.
பின்னர், நடைபெற்ற விவாதத்தில் விவசாயிகள் பேசியதாவது: “கல்தார்” தொழில்நுட்பத்தால் மா விவசாயம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. வயதான மா மரங்களில் இருந்து அதிக மகசூல் பெறவும், பருவமில்லாத காலங்களில், மாங்காய் அறுவடை செய்யவும் கல்தார் வைக்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் மா சாகுபடியில் நல்ல பலன்களை தந்தாலும், சில சமயங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக கிருஷ்ணகிரி மாங்காய் தனி ருசியுடன் இருந்தது. அது தற்போது இல்லை. அதேபோல் மா மரங்களின் ஆயுட்காலமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மா மரங்களில் கல்தார் உபயோகப்படுத்துவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுண்டேகுப்பம் பஞ்சாயத்து பகுதியில் பூக்களை விநியோகம் செய்ய வேளாண் வணிகம் மூலம் அங்காடி அமைத்து தரவேண்டும். விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும்.
வாழை திசு கன்றுகள் மானியத்தில் வழங்க வேண்டும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். ஊர்நத்தம் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதுடன், படேதலாவ் பெரிய ஏரியின் மதகை சீரமைத்து தரவேண்டும். 60 வயது முடிவடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தனப்பள்ளி ஊராட்சிக்கு நாராயணராவ் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். டான்வா மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும். அத்திப்பள்ளம் ஏரி கால்வாய் பகுதியினை சீரமைத்து தரவேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். மேலும், பட்டா மாறுதல், நில ஆக்கிரமிப்பு, மின் இணைப்பு, நீர்நிலை பராமரிப்பு, சாலை வசதி, வருவாய்த்துறை ஆவணங்கள், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடிநீர் வசதி, வங்கி கடனுதவி, அரசு புறம்போக்கு நிலங்கள், வனத்துறை, பேருந்து வசதி, பாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஏரிகள் தூர்வாருதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், ‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பட்டா மற்றும் சிட்டா தொடர்பான மனுக்களை வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ என்றார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தக்கூடிய மானியத் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை, அனைத்து விவசாயிகளுக்கும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியில் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜான்லூர்து சேவியர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, மின்சாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
The post மா மரங்களில் “கல்தார்” உபயோகிப்பதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.
