சேலம், ஜூலை 19: சேலம் மாவட்டத்தில் புத்தக தூதுவர் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 11,500 மாணவர்களுக்கு மாதந்தோறும் புத்தகம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, வாரந்தோறும் தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. மேலும், மாணவர்களுக்காக மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, புத்தகத் தூதுவர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் முதற்கட்டமாக மாதம் தோறும் ஒரு புத்தகம் வீதம் வழங்கப்படவுள்ளது.
மாணவர்கள் தங்கள் வீடுகளில் சிறிய நூலகத்தை அமைத்து புத்தகத்தைப் படித்து சிந்தனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக சீர் இளையோர் வாசகர் வட்டம் சார்பில் புத்தகத் தூதுவர் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, மாணவர்களுக்கான புத்தக விநியோகத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் முதற்கட்டமாக கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 640 மாணவர்களுக்கும், களரம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 360 மாணவர்களுக்கும், வீராணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 பேருக்கும், எம்.ஓலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 200 பேருக்கும், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 50 பேருக்கும், சந்திரசேகரபுரம் அரசுப்பள்ளியில் 150 பேருக்கும் என 5 பள்ளிகளில் படித்து வரும் 1,500 மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஒரு புத்தகம் வீதம் வழங்கப்படவுள்ளது.
அடுத்தகட்டமாக ஊரக பகுதிகளில் 5,000 பேருக்கும், நகர்ப்புறத்தில் 5,000 பேருக்கும் என மொத்தம் 11,500 மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படத்தப்படவுள்ளது. மாணவர்களுக்கு திருக்குறள், நன்னெறி கதைகள், பொது அறிவு, சாதனையாளர்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைவர்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. நேற்றைய நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் வீடுகளில் சிறிய நூலகத்தை அமைத்து புத்தகத்தைப் படித்து சிந்தனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல, இதனை ஒரு ஆரம்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாடப் புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு, ஒவ்வொரு மாணவ, மாணவியரின் வாழ்க்கையிலும் அவசியம் என்பதை இந்தப் புத்தக வாசிப்பு உங்களுக்கு உணர்த்தும். இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து 5 ஆண்டு காலம் மாணவர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்படும்.
நல்ல சிந்தனைகளை வளர்க்கவும், மொழித் திறனை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும், பாட புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு மிகவும் அவசியம். சிறந்த சமுதாயத்தை உருவாக்கக்கூடிய, அறிவு சார்ந்த, அறம் சார்ந்து சிந்திக்கக் கூடிய மாணவ, மாணவியராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள இந்த சீர் இளைஞர் வாசகர் திட்டம் மாணவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும். இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி பேசினார். சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இணைய விருப்பம் உள்ளவர்கள், புத்தக தூதுவராக செயல்பட்டு, தங்களது வசதிக்கேற்ப பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிஇஓ கபீர், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி, எம்.ஆர்.கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தலைவர் நல்லாசிரியர் சௌந்தரபாண்டியன், கல்வியாளர் குறள் அமுது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post அரசு பள்ளிகளை சேர்ந்த 11,500 மாணவர்களுக்கு புத்தகம் appeared first on Dinakaran.
