திருவாரூர் மாவட்டத்தில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி வருகை: குடியாத்தம் கிடங்குக்கு அனுப்பி வைப்பு

வேலூர், ஜூலை 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது. இதை லாரிகள் மூலம் குடியாத்தம் தாலுகா கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்கும் வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரேஷன் அரிசி பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1,250 டன் ரேஷன் அரிசி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நேற்று காலை காட்பாடிக்கு ரயிலில் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் குடியாத்தம் தாலுகா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி வருகை: குடியாத்தம் கிடங்குக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: