- அ. ஈ.
- திருவண்ணாமலை
- சத்தனூர் பிராந்தியம்
- Thandarampattu
- சட்டனூர்
- மல்லிகபுரம் கிராமம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- தாந்தரம்பட்டு தாலுகா
- சத்தனூர்
திருவண்ணாமலை, ஜூலை 18: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் பகுதியில் தமிழின் தொன்மையான எழுத்துக்கள் கொண்ட கி.பி.4ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, சாத்தனூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நடுகல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், பழனிச்சாமி, தண்டராம்பட்டு தர், சிற்றிங்கூர் ராஜா அரிஹரன், தமிழ்ச்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு அடி உயரம் மற்றும் ஒரு அடி அகலம் கொண்ட சிறிய கல்லில் 5 வரிகள் கொண்ட கல்வெட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் தெரிவித்திருப்பதாவது:
மல்லிகாபுரம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், கருங்காலிநல்லூரான் கண்ணந்தைகண் மகன் விண்ணன் ஆன் பூயலுட்பட்டான் என்று எழுதப்பட்டுள்ளது. கருங்காலி நல்லூரை சேர்ந்த கண்ணந்தை கண் மகன் விண்ணன் என்பவர் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் ஆநிரை (ஆன்பூயலுட்பட்டான்) கவரும் வெட்சிப் போரில் ஈடுபட்டு இறந்ததின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் என்பது இதன் பொருளாகும்.
இக்கல்வெட்டில் குறிப்பிடும் கருங்காலி நல்லூர் என்பது இவ்வூருக்கு அருகில் செங்கம் தாலுகாவில் உள்ள கருங்காலிப்பாடியை குறிப்பதாக இருக்கலாம். விண்ணன் என்ற பெயரும் பெருங்களத்தூர் உள்ளிட்ட சில கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடுகல் கல்வெட்டு பல வகைகளில் சிறப்பு பெற்றதாகும். தமிழகத்தில் கிடைத்த தொன்மையான நடுகல்லில் இதுவும் ஒன்றாகவும். தமிழ் எழுத்து வடிவம் தமிழி (தமிழ் பிராமி) எழுத்திலிருந்து வட்டெழுத்து வரி வடிவமாக மாற்றமடையும் காலத்தை சார்ந்தது ஆகும்.
மேலும், சங்ககால புலிமான் கோம்பை, பொற்பனைக்கோட்டை, தாதப்பட்டி, நடுகற்களை போன்று இந்த நடுகல்லும் வீரனின் உருவமில்லாமல் அமைந்துள்ளது. எந்த அரசர்கள் பெயரும் இந்நடுகல்லில் இல்லை. இதன் எழுத்தமைதி, அமைப்பு ஆகியவற்றை கொண்டு இதன் காலத்தை கி.பி.4ம் நூற்றாண்டு முதல் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக கருதலாம்.
தமிழின் தொன்மையான எழுத்து முறையான தமிழி எனும் எழுத்திலிருந்து வட்டெழுத்து கிளைத்தது. அதிலிருந்து இன்று நாம் எழுதும் எழுத்து வடிவம் படிப்படியாய் தோன்றியது என்பது தொல்லியலாளர்களின் கருத்தாகும். இந்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் பூலாங்குறிச்சி, ஈரட்டிமலை, பறையன்பட்டு, திருநாதர்குன்று, பிள்ளையார்பட்டி, அம்மன் கோவில்பட்டி போன்ற இடங்களில் கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடுகல்லும், இந்தவகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைத்த தொன்மையான பிற்கால தமிழி கல்வெட்டு வகைகளில், இந்த நடுகல் கல்வெட்டும் ஒன்றாகும். தமிழக வரலாற்றில் சிறப்பான இடத்தை இந்நநடுகல் பெறுகிறது. தமிழத்தில் இக்காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் இதுவரை மிகக்குறைவான அளவில் இருப்பதாலும், அரிய செய்தியும், வரலாற்றுக்கு வலுசேர்க்கும் இந்த நடுகல்லை பாதுகாப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழின் தொன்மையான எழுத்துக்கள் கொண்ட கி.பி.4ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
