ஏரல் அருகே பெருங்குளம் குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் நெல், வாழைகள் கருகும் அபாயம்: தனிகால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ஏரல், ஜூலை 18: பெருங்குளம் குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், வாழை கருகி வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்தள்ளனர். எனவே மருதூர் கீழக்காலில் தனிக்கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் குளம் 680 ஏக்கர் பரப்பளவுடையது. இந்த குளத்திற்கு மருதூர் அணையில் இருந்து தண்ணீர் தனிகால்வாய் மூலம் சிவகளை மேலகுளம், கீழக்குளம் வழியாக வருகிறது. மேலும் மழைக்காலத்தில் காட்டாற்று தண்ணீரும் வந்து பெருகும். பெருங்குளம் குளத்திலுள்ள 7 மடை மூலம் மாங்கொட்டாபுரம், பெருங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை பயிரிடப்படுகிறது. கடந்த 2023 டிசம்பரில் பெய்த மழை, வெள்ளத்தில் நெல், வாழை தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் கடந்த ஆண்டும் தூர்ந்து போன பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் விவசாயமும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில் நெல்பயிர்கள் பொதி வரும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடுமையாக வெயிலின் காரணமாக குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாக மாறியுள்ளது. இதனால் குளத்து தண்ணீர் 3 பாசன மடைகளில் வெளியே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பாசன மடை வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்துள்ள நெல், வாழைகள் கருகி வருகிறது. தண்ணீர் வறண்டு தரைத்தளம் வெடிப்பு ஏற்பட்டு வருவதால் பொதி வரும் பருவத்தில் கதிர்களும் நெல் பிடிக்காமல் சாவியாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்றிட ஆயில் இன்ஜின்களை வைத்து குளத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சி நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதனால் தினசரி பல ஆயிரம் செலவு செய்து இரவு, பகலாக இன்ஜினிடம் நின்று வேலை செய்து வருகின்றனர்.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீர் இருப்பதால் அணைகளில் திறந்துவிட்டு தாமிரபரணி ஆற்றில் மருதூர் கீழக்கால் வழியாக தனிகால்வாய் மூலம் பெருங்குளம் குளத்திற்கு கொண்டு வந்து கருகும் நெல், வாழைகளை காப்பாற்றிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பெருங்குளம் குளம் விவசாய சங்கத் தலைவர் சுடலை கூறியதாவது; பெருங்குளம் குளத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டு வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக மழை, வெள்ளத்தினால் நஷ்டம் ஏற்பட்டு வருமானம் இன்றி உள்ளோம். இந்த ஆண்டு கடன்கள் வாங்கி விவசாயத்தை துவக்கி உள்ள நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாக மாறியுள்ளதால் இங்குள்ள 3 மடைகளில் தண்ணீர் வராததால் கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்றிட தினசரி பல ஆயிரத்தை செலவு செய்து மோட்டார் மூலம் குளத்தில் கிடக்கும் தண்ணீரை வயலுக்கு பாய்ச்சி வருகிறோம். நெல் அறுவடை நல்லபடியாக நடந்தாலே செலவு செய்த பணத்தை எடுப்பது கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு செலவு எதிர்பார்த்ததைவிட ஐந்து மடங்கு அதிகமாகி உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு தனிகால்வாய் மூலம் பெருங்குளம் குளத்தை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post ஏரல் அருகே பெருங்குளம் குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் நெல், வாழைகள் கருகும் அபாயம்: தனிகால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: