தஞ்சாவூர், ஜுலை 18: தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக நகரை அழகாகவும், தூய்மையாகவும் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். அதிலும், குறிப்பாக பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயிலடி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில் மேரீஸ் கார்னர் பகுதியில் இருந்து தொல்காப்பியர் சதுக்கம் செல்லும் சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து வரும் பஸ், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த பாலத்தை கடந்து தான் சென்று வருகின்றன. அதேபோல் நாகை, திருவாரூர், மன்னார்குடி செல்லும் பஸ்களும் மற்றும் பிற நகர பஸ்களும் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில் மேற்கண்ட பாலம் முடிவடையும் வண்டிக்காரத் தெரு அருகே சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் பூ, பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க செல்கின்றனர். இதனால், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களும், பிற வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த பகுதியில் உள்ள கடைகளின் விளம்பர போர்டுகள், பதாகைகள் உள்ளிட்டவை களும் சாலையோரத்திலேயே வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் நடந்து செல்லவே பொது மக்கள் அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விளம்பர போர்டுகள், பதாகைகள் மற்றும் தள்ளு வண்டிக் கடைகள் ஆகியவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சை வண்டிக்கார தெரு மேம்பாலம் அருகே சாலையோர தள்ளுவண்டி கடைகளால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.
