பெரம்பலூர், ஜூலை18: பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- சாலை மறியலில் ஈடுபட்ட 89 பெண்கள் உள்பட 171 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு,
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் நலன் கருதி, காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல், ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, உடனடியாக நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். 1 லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் வகையில் வெளியிடப் பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பாக ஜூலை 17 18 ஆகிய 2 நாட்களும், மாநில அளவில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி முதல்நாளான நேற்று (17ம் தேதி) மாவட்ட தலைநகரான பெரம்பலூர் பாலக்கரையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், டிட்டோ- ஜாக் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களான, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் மணிவண்ணன் ஆகியோரது கூட்டு தலைமையில், நிர்வாகிகள் அருள்ஜோதி சின்னசாமி உள்ளிட்ட இரு பால் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு காலை 10.40 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாலக்கரை ரவுண்டானா மேற்கு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10.50 மணி அளவில் பெரம்பலூர் (உட்கோட்டம்) டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட 89 பெண் ஆசிரியைகள் உள்பட 171 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பகோரி தொடக்ககல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம், மறியல் appeared first on Dinakaran.
