கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணை பகுதியில் 20 மிமீ., மழை பதிவானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி, கெலவரப்பள்ளி அணை பகுதியில் அதிகபட்சமாக 20 மி.மீ., மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் மொத்தம் 53.60 மி.மீ., மழை பதிவானது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் 267 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 387 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது நீர்மட்டம் 50.95 அடியாக உள்ளது. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக 132 கனஅடியும், ஆற்றில் 255 கனஅடி என மொத்தம் 387 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாரூர் ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியில் பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக, விநாடிக்கு 102 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ள நிலையில், அணையின் மொத்த மொத்த உயரமான 19.60 அடியில் நீர்மட்டம் 5.25 அடியாக உள்ளது. இதே போல், சூளகிரி அருகே சின்னாறு அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் மொத்த உயரமான 32.80 அடியில், தற்போது நீர்மட்டம் 7.35 அடியாக உள்ளது.
The post மாவட்டம் முழுவதும் பரவலாக மழை appeared first on Dinakaran.
