×

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (17.7.2025) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட அறிவுறுத்தினார்.

குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவுப் பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்புப் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நிறைவேற்றி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.

கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளதையும், கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளான மெட்ரோ இரயில் திட்டங்கள், புதிய குடிநீர்த் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் அவர்கள், இப்பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி, வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று, இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற பணிகள், பாதி முடிவுற்ற பணிகளையெல்லாம் போர்க்கால அடிப்படையில செய்து முடித்திட, மின் வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாகத் தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் இருக்கின்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

The post மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Mu. K. ,Stalin ,Secretariat ,Tamil Nadu ,Department of Municipal Administration and Drinking Water Supply ,Mu. K. Stalin ,
× RELATED திருவண்ணாமலையில் நடக்கும் திமுக...