
வாழப்பாடி: வாழப்பாடி அருகே போதையில் தந்தை உள்பட 5 பேரை கத்தியால் குத்திய பி.இ. பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்திரபிள்ளை வலசு ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). பி.இ. பட்டதாரியான இவர், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை அருண்குமார் திருமணம் செய்துள்ளார். அருண்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது மனைவி, அருண்குமாருடன் குடும்பம் நடத்த பிடிக்காமல், அதே ஊரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியை பிரிந்த நிலையில் அருண்குமார், தந்தை செல்வத்துடன் வசித்து வந்தார்.
குடிக்கு அடிமையான அருண்குமாரின் அட்டகாசம் தாங்க முடியாததால், செல்வம், வீட்டில் இருந்து மகனை வெளியேற்றி விட்டார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் தாத்தா கணேசன் (75) வீட்டுக்கு சென்று அருண்குமார் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு போதையில், அருண்குமார் தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தந்தை செல்வம், தாத்தா கணேசன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்ட அருண்குமார், இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில், உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சிகிச்சைக்கு அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ ஊழியர்களுடனும் அருண்குமார் தகராறு செய்து, ஆம்புலன்ஸ் கண்ணாடியையும் உடைத்துள்ளார். இதனால் ஆம்புலன்ஸ் திரும்பிச்சென்றது.
தொடர்ந்து அருண்குமார் ேராட்டில் அலப்பறை செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (48), அவரது மனைவி ரேவதி (44), மகன் தர்ஷன்(15) ஆகியோர் காரில் தங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அந்த காரை வழிமறித்த அருண்குமார், சிறுவன் தர்ஷன் மற்றும் திருநாவுக்கரசு, ரேவதி ஆகியோரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு அருண்குமாரின் தாத்தா மற்றும் தந்தையை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கும், மற்ற மூவரையும் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போதையில் ரகளையில் ஈடுபட்ட அருண்குமாரை கைது செய்தனர்.
The post தாத்தா, தந்தை உள்பட 5 பேருக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.
