வேலூர், ஜூலை 17: காட்பாடியில் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
டெல்லியை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.23 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நபர் டெல்லி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரின் வங்கி கணக்கில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் வங்கி கணக்கிற்கு பணம் கைமாறியது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். கோவைக்கு சென்று வங்கி கணக்கில் பணம் வந்த நபரை பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வந்தனர். காட்பாடி அடுத்த விருதம்பட்டு, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உசேன் ஷெரிப் (44) என்பவரை விசாரணைக்காக டெல்லி சைபர் கிரைம் போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிறிது நேரம் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை டெல்லிக்கு கைது செய்து அழைத்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
டெல்லியை சேர்ந்த நபரிடம் ரூ.26 லட்சம் ஆன்லைன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பணத்தை மோசடி செய்துள்ளனர். உசேன் ஷெரிப் மற்றும் கோவையில் கைது செய்யப்பட்ட நபரும் இரண்டு பேரும் நண்பர்கள். இவர்கள் இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். இதில் உசேன் ஷெரிப் காட்பாடியிலும், மற்றொரு நபர் கோவையிலும் தங்கியுள்ளனர். உசேன் ஷெரிப் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் எந்த மாதிரி ஆன்லைனில் பணத்தை மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை முடிவில் தான் தெரியவரும்.
The post காட்பாடியில் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது டெல்லி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.
