மன்னார்குடி, ஜூலை 17: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற திமுக நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அகமது ஜும்மா(35). நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருந்து வரும் இவர், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அடிதடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக நேற்று காலை வீட்டிலிருந்து பைக்கில் சென்றார்.
இவரது பைக்கை, இரண்டு பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கும்பல், வேங்கைபுரம் அருகே அகமது ஜும்மாவை வழிமறித்து கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு பைக்கில் தப்பினர். இதில் அவரது கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், தாலுகா எஸ்எஸ்ஐ ஆனந்தன், தனிப்பிரிவு ஏட்டு சிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அகமது ஜும்மாவை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மன்னார்குடி தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
The post வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற திமுக நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்குதல் appeared first on Dinakaran.
