தஞ்சாவூர், ஜூலை 17: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் மற்றும் கும்பகோணம் ஊராட்சி பாபுராஜபுரம் நூர்மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடந்தது உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இம்முகாமில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு விவரங்களை கேட்டறிந்து மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார். இம்முகாமில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின முகாம் கும்பகோணம் மாநகராட்சி மேலக்காவேரி, வாட்டர் டேங்க் வளாகம், அய்யம்பேட்டை பேரூராட்சி T.K.G. மஹால், திருவிடைமருதூர் ஊராட்சி ஈஸ்வரி மஹால், பேராவூரணி ஊராட்சி திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு பொதுசேவை மையம், கும்பகோணம் ஊராட்சி நூர்மஹால், தஞ்சாவூர் ஊராட்சி பிள்ளையார்பட்டி ஆகிய 6 இடங்களில் நேற்று நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள் விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளைப் பெறத் தேவையான தகுதிகள்/ஆவணங்கள், ஆகிய விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வழங்கும் பணியினை தன்னார்வலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும். முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களுடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விவரமும் தன்னார்வலரால் தெரிவிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும் இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். வீடு, வீடாக விழிப்புணர்வு பணி மேற்கொள்வதற்கும், முகாம்களை ஏற்பாடு செய்வதற்கும், ஒவ்வொரு ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்கள் நகர்பகுதியில் 45 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 75 முகாம்களும் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் மணிமாறன், பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலு, வட்டாட்சியர் சண்முகம், கும்பகோணம் அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவர் புனிதவதி குமார், அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராசன், சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.
