120 இரும்பு கால இடங்கள் கண்டுபிடிப்பு

சேலம், ஜூலை 17: சேலம் மாவட்டத்தில் 120 இரும்பு கால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, இந்திய தொல்லியல் துறை நிபுணர் பெருமிதம் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியார் இருக்கை – பேரறிஞர் அண்ணா இருக்கை – முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் ‘‘திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்’’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நேற்று நடந்தது. கவுரவ விரிவுரையாளர் சிலம்பரசன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினரும், கலைஞர் ஆய்வு மைய இயக்குநருமான சுப்பிரமணி தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் ரமேஷ், ‘‘தொல்லியல் வரலாற்றில் சேலம் மாவட்டம்’’ என்ற தலைப்பில் பேசியதாவது:
இராபர்ட் புரூஸ்ஃபுட் 1864ம் ஆண்டு சேர்வராயன் மலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் கற்கால கருவிகள் மற்றும் இரும்புக் கால ஈமச் சின்னங்களை கண்டெடுத்தார். சேலம் மாவட்டத்தில் வேப்பிலைப்பட்டி, பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, பிடாரி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் நுண் கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன.மேட்டூர் அருகிலுள்ள தெலுங்கனூர் என்னும் இடத்தில் ஈமக்குழியில் புதிய கற்கால கருவி மற்றும் இரும்புக் கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளார், கோட்டைமேடு, மேச்சேரி, ஓமலூர், கோனேரிப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, நத்தப்பட்டி ஆகியன வரலாற்றுத் தொடக்கக்கால வாழ்விடப் பகுதிகள் ஆகும். இதில், கி.பி.4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன்கோவில்பட்டி கல்வெட்டு சேலம் மாவட்டத்திலுள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டதாகும்.

சேலம் மாவட்டத்திலுள்ள மஞ்சவாடி, தொப்பூர், ஆத்தூர் ஆகிய மலை கணவாய்கள், பண்டைய கால வணிக பாதைகள் ஆகும். அவை, மைசூர் பீடபூமி மற்றும் கிழக்குக் கடற்கரை சமவெளிகளை இணைக்கும் இணைப்பாக செயல்பட்டன. கற்பதுக்கை, கல்வட்டம், கற்திட்டை, கற்குவை, முதுமக்கள் தாழி, நெடுங்கல், மேற்குப்புற இடுதுளையுடன் கூடிய கற்பதுக்கை உள்ளிட்ட ஈமச் சின்னங்கள் சேலம் மாவட்டத்தில் கிடைத்துள்ளன.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 120 இரும்புக் கால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொளத்தூருக்கு அருகிலுள்ள மாங்காட்டில் சிதைவுற்ற கல் பதுக்கையிலிருந்து கண்டறியப்பட்ட இரும்பு வாளின் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதன் சராசரி காலம் கி.மு.1510 என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கனூரில் கண்டெடுக்கப்பட்ட வாளை மெட்டலோகிராஃப் என்னும் உலோக உள்ளமைப்புப் பகுப்பாய்வு செய்ததில், அது அதி-உயர் கார்பன் எஃகால் ஆனது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எஃகின் காலம் கீழ்வரம்பாக கி.மு.1233 கணக்கில் கொள்ளப்பட்டது. இது இதுவரை கிடைக்கப்பெற்ற எஃகுகளில் காலத்தால் மிகவும் பழமையானதாகும். இவ்வாறு ரமேஷ் பேசினார்.

இதில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (ஓய்வு) கோவிந்தராஜ், ‘‘சிந்துவெளி நாகரீகத்தில் திராவிடக் கட்டிடக் கலைக் கூறுகள்’’ என்னும் தலைப்பில் பேசினார். அப்போது, சிந்துவெளி கட்டிட அமைப்பில் காணப்படும் திராவிட கட்டிடத் தன்மைகளை விளக்கிக் கூறினார். மேலும், சிந்துவெளி நாகரிக அகழாய்வில் கிடைத்த எழுத்து மற்றும் குறியீட்டு வடிவங்களைத் திராவிடப் பகுதிகளில் கிடைத்த தரவுகளோடு ஒப்பிட்டுப் பேசினார். விழாவில், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தொல்லியல் மற்றும் மொழி அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆய்வு மாணவர் நரேன்குமார் நன்றி தெரிவித்தார்.

The post 120 இரும்பு கால இடங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: