பெரம்பலூர், ஜூலை 17: போட்டி தேர்வு, நேர்காணல் எதிர்கொள்ள தன்னம்பிக்கை, தனித்திறன் ஆங்கில புலமை அவசியம் என்று வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் நடந்த பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் சாகுல் ஹமீது பேசினார். வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டல் மையத்தின் திறன் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டல் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.
பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் சேகர் தலைமை வகித்து பேசுகையில்,
அறிவை பெருக்கிக் கொள்வதோடு, தன் கல்வி சார்ந்த திறன்களையும் வளர்த்து கொள்வதன் மூலமாகத்தான், வாழ்க்கையில் தன்னிறைவு பெறுவதோடு, தனிமனித மேம்பாடு அடைய முடியும்\” என்றார்.
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் சாகுல் ஹமீது பேசுகையில்,
கல்லூரி மாணவ, மாணவிகள் பட்ட வகுப்புகளை முடித்து வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளையும், நேர்காணல்களையும் எதிர் கொள்ள தன்னம்பிக்கையும், தனித்திறன்களையும், ஆங்கில புலமையையும் வளர்த்துக் கொள்வது அவசியம். நேர்காணல்களில் நேர்மறையான சிந்தனைகளையே வெளிப்படுத்த வேண்டும்.
பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அரசுத்துறை வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளை மாணவ, மாணவிகள் வளர்த்து கொள்ள வேண்டும். கல்லூரிகளில் பயிலும் போதே இணைய தளத்தை பயன்படுத்தி, படிப்புக்கேற்ற வேலை வாய்ப்புகளை தேடி அதனைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வழி முறைகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் பல்வேறு வேலைவாப்புகளை பெறுவதற்கு நம்ப தகுந்த வழிமுறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு சேவைகளை செல் போனிலேயே பெறுவதற்கான வசதிகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிகளைக் கூறினார்.
கணிணி அறிவியல் துறைத் தலைவர் சகாயராஜ் வாழ்த்தினார். நிகழ்ச்சிகளை வணிகவியல் துறைத் தலைவர் முத்துராஜ் தொகுத்து வழங்கினார். பயிற்சி முகாமில் இயற்பியல் துறைத் தலைவர் பாஸ்கரன், கணித துறைத் தலைவர் சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியின் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் அலுவலர் மூர்த்தி வரவேற்றார். முடிவில் தாவரவியல் துறைத்தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.
The post மழைக்கு முன் திரண்ட கார்மேகம்; போட்டி தேர்வு, நேர்காணல் எதிர்கொள்ள தன்னம்பிக்கை, தனித்திறன் ஆங்கில புலமை அவசியம்: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பேச்சு appeared first on Dinakaran.
