கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு

போச்சம்பள்ளி, ஜூலை 17: போச்சம்பள்ளி, மத்தூர், வேலம்பட்டி, சத்தம்பட்டி, காவேரிப்பட்டணம், குள்ளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலர்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் குண்டுமல்லிக்கு பெங்களூரு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மல்லிகை பூவை பொறுத்து வரையில் மழை மற்றும் பனி காலங்களில், விளைச்சல் அதிகமாக காணப்படும். கோடை காலங்களில் நாளொன்றுக்கு சுமார் 50 டன் குண்டுமல்லி பூக்கள் பெங்களூரூ சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. விளைச்சல் அதிகம் இருக்கும் காலங்களில் பூக்களின் விலை குறைந்து கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகும். இதனால், சந்தையில் நிலையான விலை கிடைக்கும் கனகாம்பரம் பூக்களுக்கு மாறி வருகிறார்கள்.

இதுகுறித்து சந்தம்பட்டி விவசாயி சக்திவேல், வரதராஜன் கூறியதாவது: கனகாம்பரம் பூவை பொறுத்தவரை சிகப்பு, ஆரஞ்ச், டெல்லி கனகாம்பரம், பச்சை கனகாரம்பரம் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. இதில் பச்சை கனகாம்பரம் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. அதிகளவில் ஆரஞ்சு கனகாம்பரம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மல்லி, முல்லை மலர்களுக்கு இணையாக விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். கனகாம்பரம் சாகுபடிக்கு ஆவணி முதல் தை மாதம் வரை ஏற்றதாகும். விதைத்த 30வது நாள் முதல் பூக்கள் பூக்கத்தொடங்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் பூக்களை பறிக்க வேண்டும்.

கனகாம்பரத்துக்கு சந்தையில் ஆண்டும் முழுவதும் நிலையான விலை கிடைப்பதால், பல விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடி செய்துள்ளனர். இந்த பூக்களுக்கு எப்போதும் பெங்களூரூ மார்க்கெட்டில் நிரந்தர விலை கிடைப்பதால், கிலோ ரூ.600க்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: