×

முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 17: கிருஷ்ணகிரி அணையில் இருந்து, 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை, கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில், 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு, முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் திறந்து வைத்து, தண்ணீரில் மலர் தூவினர்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி அணையில் இருந்து, வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்கள் வழியாக, முதல்போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், இன்று (16ம் தேதி) முதல் வருகிற நவம்பர் 12ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையில் தற்போது உள்ள நீர் அளவினை கொண்டும், நீர் வரத்தினை எதிர் நோக்கியும், அணையின் வலதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 75 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 76 கனஅடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 151 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளி அள்ளி, கால்வே அள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ர அள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டி அள்ளி, நாகோஜன அள்ளி, ஜனப்பரஅள்ளி மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், 50.95 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 267 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

அணையின் ஊற்று கால்வாயில் விநாடிக்கு 12 கனஅடியும், ஆற்று மதகுகளில் விநாடிக்கு 255 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, சாகுபடி பணிகளை துவக்கிய விவசாயிகள், பாசனத்துக்கு திறக்கப்பட்டு உள்ள நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெறவேண்டும். மேலும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குனர் காளியப்பன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் பொன்னிவளவன், தாசில்தார் சின்னசாமி, பிடிஓ உமாசங்கர், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர பொறுப்பாளர் அஸ்லாம், நகர்மன்ற உறுப்பினர்கள் வேலுமணி, மீன்ஜெயகுமார், மதீன், சீனிவாசன், சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,MLA ,Krishnagiri Dam ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்