மணலியில் ரூ.2.48 கோடியில் சுகாதார மையம், சமுதாயக்கூடம்

 

திருவொற்றியூர், ஜூலை 17: மணலி மண்டலம் 22வது வார்டு சின்னசேக்காடு பகுதியில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக நவீன சுகாதார மையம் கட்டி தர வேண்டுமென்று வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி கோரிக்கை விடுத்தார். இதற்கான தீர்மானத்தை மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கொண்டு வந்தார்.

இதையடுத்து, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.2.08 கோடியில் இரண்டு தளங்களுடன், அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய நவீன சுகாதார மையம் கட்ட சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியது. இதற்கான கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி கவுன்சிலர் தீர்த்தி தலைமையில் நடந்தது. உதவி ஆணையர்(பொறுப்பு) தேவேந்திரன் முன்னிலை வகித்தார்.

கலாநிதிவீராசாமி எம்.பி, கே.பிசங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து அரசு மற்றும் ஆரம்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் அறுசுவை உணவு வழங்கினர்.

அதேபோல் 18வது வார்டு நெடுஞ்செழியன் சாலையில் வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் முன்னிலையில் ரூ.40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினர். இதில், உதவி செயற்பொறியாளர்கள் சுமித்ரா, தென்னவன், உதவி பொறியாளர் மைதிலி, முன்னாள் கவுன்சிலர் கரிகால்சோழன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

The post மணலியில் ரூ.2.48 கோடியில் சுகாதார மையம், சமுதாயக்கூடம் appeared first on Dinakaran.

Related Stories: