திருவாரூர், ஜூலை 16: தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் அமைந்த பின்னர் முதல்வர் மு. க ஸ்டாலின் மூலம் மக்களுக்கான பல்வேறு உன்னத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதுடன் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே அரசு நிர்வாகம் நேரில் சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில்மக்களுடன் முதல்வர்என்ற உன்னத திட்டத்தின் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 3 கட்டங்களாக மாநிலம் முழுவதும் சுமார்ஒரு கோடிக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த திட்டமானது மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் திருவாரூர் நகராட்சி சார்பில் 7, 8 மற்றும் 9 வார்டு பொதுமக்களுக்காக இந்த திட்டமானது திருவாரூர் துர்க்காலயா சாலையில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இதில் முகாமினை துவக்கி வைத்து உடனடி தீர்வாக ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கான சான்றுகளையும், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினையும் கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினர். பின்னர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் நிருபர்களிடம் கூறியதாவது,உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் வரலாற்று சிறப்புமிக்க உன்னத திட்டமாகும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அட்டவணைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்கள் தொடர்புடைய முகாம்களில் கலந்து கொள்ளலாம்.மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் இந்த முகமானது இன்று திருவாரூர், மன்னார்குடி மற்றும் கொரடாச்சேரி வட்டாரங்களிலும், திருவாரூர் மற்றும் மன்னார்குடி நகராட்சிகளிலும், கொரடாச்சேரி பேரூராட்சி பகுதிகள் என இடங்களில் நடைபெறுகின்றது.
தொடர்ந்து, நாளை மறுதினம் (17ம் தேதி) நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி மற்றும் கோட்டூர் வட்டாரங்களிலும், கூத்தாநல்லூர் நகராட்சியிலும், பேரளம் பேரூராட்சி என 6 பகுதிகளிலும் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் டிஆர்ஓகலைவாணி, ஆர்டிஓ சௌம்யா, நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் கமிஷனர் சுரேந்திரஷா, பணிநியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ்மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில், வரதராஜன், சின்னவீரன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் 185 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.
