தஞ்சாவூர், ஜூலை 16: தஞ்சை அருகே 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் கால்நடைகளுக்கு 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2.77 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பகுதிகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தஞ்சை அருகே உள்ள பொய்யுண்டார்கோட்டை கால்நடை மருந்தகத்தில் நடந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் ஷெரீப் தலைமையில் கால்நடை ஆய்வாளர் ரோஸ்லின்மேரி, உதவியாளர் ராமதிலகம் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர். பொய்யுண்டார்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட வடக்கூர் தெற்கு, வடக்கு, பாச்சூர், நடுவூர், ஈச்சங்கோட்டை பகுதிகளில் ஒரு வாரத்துக்குள் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தஞ்சை அருகே 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.
