வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தஞ்சாவூர், ஜூலை 16: தஞ்சையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி சதுர்காடு வீரக்குறிச்சி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது, பட்டுக்கோட்டை தாலுகா சதுர்காடு வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தெற்கு மாவட்ட செயலாளர் அரவிந்த்குமார் ஆகியோர் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

பட்டுக்கோட்டை தாலுகா சதுர்காடு வீரக்குறிச்சி கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடுகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசு வழங்கும் எந்த சலுகைகளும் கிடைக்காத நிலை உள்ளது. மேலும் வீட்டு மனைபட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் தமிழ் முதல்வன், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ராஜலிங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், மாணவர் முற்போக்கு கழகம் மாவட்ட அமைப்பாளர் வீராச்சாமி, திருமேனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: