மேட்டூர், ஜூலை 16: மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து, உபரிநீர் போக்கி வழியாக வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இரண்டு வாரமாக உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர், 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. உபரி நீர் நிறுத்தப்பட்டதன் காரணமாக, தங்கமாபுரிபட்டணம், சின்னக்காவூர், சேலம் கேம்ப் பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகளில் தண்ணீர் தேங்கியது. தேங்கிய நீரில் கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட மீன்கள் உள்ளன. நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. அரஞ்சான், திலேபி, உள்ளிட்ட பல வகையான மீன்கள் செத்து மிதப்பதால் கரையோர குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.தண்ணீர் மாசு அடைந்ததால் மீன்கள் இறந்ததா? அல்லது வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்ததா என்று மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீர் மாதிரி சேகரித்துச் சென்றனர்.
தொடர்ந்து, இப்பகுதியில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை, மாசு கட்டுப்பாடு வாரியம் கண்டுபிடித்து மீன்களை காப்பாற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.
