×

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கியது

சேலம், ஜூலை 16: சேலம் மாவட்டத்தில் 432 இடங்களில் நடைபெறவுள்ள ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ திட்ட முகாம் நேற்று தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகளை, விரைவாகவும், அவர்களின் குடியிருப்பு அருகிலும் சென்று வழங்க, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சேலம் சூரமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை வரும் நவம்பர் மாதம் வரை 432 இடங்களில் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்நாளான நேற்று, எருமாபாளையத்ைத சேர்ந்தவர்களுக்கு வள்ளுவர் நகர் முத்தாயம்மாள் திருமண மண்டபத்திலும், இடைப்பாடி நகராட்சி 1, 2, 3 வார்டுகளுக்கு ஜே.கே.பி சாலை நாச்சிபாளையம் காளியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி, 1,10,11,12,13,14,15 வார்டுகளுக்கு ஆத்தூர் மெயின் ரோடு வாசு மஹாலிலும், சேலம் ஒன்றியம், இனாம் வேடுகத்தாம்பட்டி, திருமலைகிரி பகுதிகளுக்கு செம்மண்திட்டு கிருஷ்ணமூர்த்தி மஹாலிலும், வீரபாண்டி ஒன்றியம், சென்னகிரி, ராஜபாளையம் பகுதிகளுக்கு சென்னகிரி ருக்மணி அம்மாள் திருமண மண்டபத்திலும் முகாம் நடந்தது.

நேற்று நடந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2,500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் அதிகபட்சமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்கள் வந்தன. மாவட்டத்தில் இதுவரை உரிமைத்தொகை பெறாத பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை வழங்கி சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் நகர்ப்புறப்பகுதிகளில் 168 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது. முகாம்களில் பங்கேற்கும் மக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகிறது.

இம்முகாமில் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு, வருவாய்த்துறை, எரிசக்தித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில் நுட்ப துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை சார்ந்து மனுக்கள் பெறப்படும். குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புறப்பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள்

தெரிவித்தனர்.

இன்று முகாம் நடக்கும் இடங்கள்

நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சியான சன்னியாசிகுண்டு பகுதி மக்களுக்காக பாலாஜி மஹாலில் இன்று முகாம் நடக்கிறது. இதேபோல், இடங்கணசாலை நகராட்சி 1, 2வது வார்டுகளுக்கு அங்குள்ள நகராட்சி திருமண மண்டபத்திலும், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 3, 4, 5, 10, 11, 12 மற்றும் 13வது வார்டுகளுக்கு செங்குந்தர் திருமண மண்டபத்திலும் முகாம் நடக்கிறது. ேமலும், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், சந்தியூர், பாரப்பட்டி ஊராட்சிகளுக்கு பாரப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்திலும், அயோத்தியாபட்டணம் ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு அங்குள்ள மாரியம்மன் கோயில் மைதானத்திலும், வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி ஊராட்சிகளுக்கு பழனியாபுரம் சமுதாய நலக்கூடத்திலும் முகாம் நடக்கிறது.

The post ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Salem ,Stalin with ,Salem district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்