கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி, ஓசூரில் துவங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களை கலெக்டர், எம்எல்ஏக்கள் பார்வையிட்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்ட முகாமினை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, ஓசூரில் பகுதிகளில் நேற்று நடந்த “உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை, கலெக்டர் தினேஷ்குமார், எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது:
பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மாவட்டத்தில், இம்முகாம் இன்று (நேற்று) முதல், வருகிற அக்டோபர் 16ம் தேதி வரை 228 இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் நகர்ப்புறங்களில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு இம்மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், புதிய ஆதார் கார்டு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குடும்பத்தினரையும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்து அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், சமீபத்தில் 3 தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பிற அரசு உதவித் தொகை பெறும் குடும்பங்களில் உள்ள மகளிர், காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து அதில் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள மகளிர் மற்றும் அரசு வழங்கும் மானியத்தில் 4 சக்கர வாகனங்கள் வாங்கியுள்ள குடும்பத்தில் உள்ள மகளிர் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்.
இதற்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க இயலாதவர்கள், மூன்று தளர்வுகளுக்கு பொருத்தமானவர்கள் மற்றும் அனைத்து தகுதியுடைய மகளிர் அனைவரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்காக 4 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் விண்ணப்பங்கள் இன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இம்முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை முதல்வரால் கூர்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. இம்மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம், பேரூராட்சிகளில் வசிப்பவர்கள் வரி ரசீதில் முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு, விண்ணப்பம் அளித்த அன்றே உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ராணி, பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர்.மாலதி, நகர்மன்ற துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தாசில்தார்கள் சின்னசாமி, குணசிவா, சின்னசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கிருஷ்ணகிரி, ஓசூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் appeared first on Dinakaran.
