நாகர்கோவில், ஜூலை 16: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறையில் சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு நடைமுறையில் இருந்த தடையை நீக்கி 250 மாணவிகளுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் உள்ள தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதியும், இந்த அனுமதி மற்ற சிறப்பாசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்து அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளுக்கு முரணாக சிறப்பாசிரியர் பணியிடங்களில் பள்ளி நிர்வாகத்தால் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்குதல் சார்ந்து பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கல்வி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்ட ஆணைகளை எதிர்த்து சார்ந்த ஆசிரியர்களால் நீதிமன்றங்களில் ெதாடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற ஆணைகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது.
அரசு ஆணைகளுக்கு முரணாக செய்யப்பட்ட பணி நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் அரசால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அது தொடர்பான அரசாணைகளை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். வருங்காலங்களில் அரசாணைகளுக்கு மாறாக எவ்வித நியமனங்களும் மேற்கொள்ளப்படாமல் உள்ளதை உறுதி செய்து அரசாணையை அனைத்து அரசு நிதியுதவி பெறும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்திற்கும் சார்பு செய்து அதன் ஒப்புகையை பெற்று கோப்பில் வைத்திட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறப்பாசிரியர் நியமனம் அரசாணைக்கு முரணாக நியமனங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
