கோவை, ஜூலை 16: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி, நர்சரி மற்றும் பிரைமரி, விளையாட்டு பள்ளிகளில் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் போக்சோ ஒருங்கிணைப்பாளர் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்படி, கோவை நகர், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, பேரூர், தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம், அன்னூர், காரமடை, சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய வட்டாரங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில், அவர்களுக்கு போக்சோ சட்டம் தொடர்பான விளக்கம், போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும் உள்ளிட்டவை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் பாலியல் தொடர்பான பிரச்னையை மாணவர்கள் கூறினால் அதனை பள்ளி நிர்வாகம் மறைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
பாலியல் ரீதியான பிரச்னை மாணவர்களுக்கு இருப்பது தெரியவந்தால் உடனடியாக போலீசார், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 764 தனியார் பள்ளிகளில் போக்சோ ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் போக்சோ குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் இருக்கிறதா? என்பதை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post 764 தனியார் பள்ளிகளில் போக்சோ ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.
