கோபி, ஜூலை 16: கோபி அருகே உள்ள நம்பியூரில் நாய்கள் கடித்து ஒரு ஆடு உயிரிழந்த நிலையில், நான்கு ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது. கோபி அருகே உள்ள நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து உள்ளன.
நம்பியூர் அருகே உள்ள மின்னகாட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் கறியை வெட்டி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் இருந்து எலும்புகளை தின்று பழகிய தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்டு உள்ள ஆடுகள், கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றும் நம்பியூர் அருகே உள்ள அட்டாரிபாளையம் செல்லாங்காட்டு தோட்டத்தை சேர்ந்த குணசேகரன்(56) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் நேற்று முன்தினம் இரவு அடைத்து வைத்து உள்ளார்.நள்ளிரவில் கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த 5 ஆடுகளையும் கடித்தது. இதில் ஒரு ஆடு உயிரிழந்த நிலையில் நான்கு ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது.
நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடுத்தடுத்து ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்று வருவது அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கால்நடைகளை கொன்று வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தெருநாய்கள் கடித்து ஆடு பலி appeared first on Dinakaran.

