×

கோட்டாறு பகுதியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வழியாகவும், இங்கிருந்தும் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்தபாடில்லை. வீடுகள் தோறும் வந்து பைக்குகளில் ரேஷன் அரிசியை வாங்கி ஒரு இடத்தில் பதுக்கி வைத்து பின்னர் மொத்தமாக கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். கேரளாவில் அரிசிக்கு நல்ல விலை கிடைப்பதால், கடத்தல்காரர்கள் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கோட்டாறு முதலியார்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி புஷ்பா தேவி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீட்டின் வெளிப்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். பின்னர் அங்கிருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த் அதிகாரிகள், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் மூடை மூடையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அரிசி மூடைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் வீட்டை திறக்க யாரும் முன்வரவில்லை. இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த யாரும் சரியான பதில் அளிக்கவில்லை.

இதனால் வீட்டை திறந்து அரிசியை கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரிசி பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் கோட்டாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோட்டாறு பகுதியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kotaru ,Nagarko ,Kanyakumari district ,Kerala ,Revenue Department ,Food Trafficking Prevention Unit police ,Dinakaran ,
× RELATED எல்எல்ஆர் வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சம்...