×

பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா.. கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார்: பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆக்சியம்-4 வணிக திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோர் கடந்த மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இதன் மூலம் 41 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற சாதனைகளை சுபான்சு சுக்லா படைத்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததாக நாசா தெரிவித்தது. இந்தநிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. விண்கலம் தரையிறங்கியதும், ஸ்பேஸ்எக்ஸின் மீட்பு கப்பல் விண்கலத்தை அடைந்து, விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்து சென்றனர். இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரராக, அவரது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். நமது நாட்டின் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்தை நோக்கிய மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா.. கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார்: பிரதமர் மோடி பாராட்டு!! appeared first on Dinakaran.

Tags : Subanshu Sukla ,Earth ,PM ,Modi ,Delhi ,Narendra Modi ,Subanshu Shukla ,Subansu Shukla ,NASA ,Becky Witson ,Slavos Uznanski-Wisniewski ,Poland ,PM Modi ,
× RELATED கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க...