×

சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில அரசு பள்ளியில் படித்த 34 மாணவ, மாணவிகள் தேர்வு

நாமக்கல், ஜூலை 15: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 34 மாணவ, மாணவிகள், இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கல்வி கட்டணமாக தமிழக அரசு ரூ.2 கோடி செலுத்துகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் ‘நான் முதல்வன் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியுடன் அவர்களின் திறன்களையும் மேம்படுத்த, திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ்2 படித்த 34 மாணவ, மாணவிகள், பல்வேறு அனைத்திந்திய தேர்வுகள் மூலம் உயர்கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவி தனு இமாச்சல் பிரதேசத்தில் பேஷன் டெக்னாலஜி படிப்பு பயில உள்ளார்.

இந்தியாவிலேயே தேசிய உடையலங்கார தொழில்நுட்ப கல்லூரியில், ஆண்டுக்கு 24 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனு தேர்வு செய்யப்பட்டுள்ளது மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளது. 34 மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு கல்வி கட்டணமாக ரூ.52.26 லட்சம், அரசு செலுத்தியுள்ளது. மேலும் மொத்தமாக உயர்கல்வி பயிலுவதற்கு சுமார் ரூ.2கோடி அரசு செலுத்துகிறது. உயர்கல்வி பயில தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் துர்காமூர்த்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கலெக்டர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘மாணவ, மாணவிகள் உயர்கல்வியினை சிறப்பாக பயின்று சமூகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும். மேலும் உயர்கல்வியுடன் தங்களது தனித் திறமையை மேம்படுத்தி கொள்ள வேண்டும். கிடைக்கிற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில அரசு பள்ளியில் படித்த 34 மாணவ, மாணவிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,India ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி