×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

 

காஞ்சிபுரம், ஜூலை 15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடங்க உள்ளது என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், “உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம் குறித்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, “உங்களுடன் ஸ்டாலின்’’ என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் என மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இதில், முதற்கட்டமாக ஜூலை 15ம்தேதி முதல் ஆகஸ்ட் 14ம்தேதி வரை நகர்ப்புற பகுதிகளில் 25 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 53 முகாம்களும் என மொத்தம் 78 முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த, முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்கள்.

மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று, தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து அரசு திட்டங்கள் மக்களின் இல்லத்திற்கே சென்று சேரும் “உங்களுடன் ஸ்டாலின்’’ திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் (15.7.2025) இன்று முதல் முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் விளம்பரம் ஏற்படுத்து வகையில் பொதுமக்கள் கூடும் இடங்கள் பேனர் அமைத்தல், ஆட்டோ மூலம் விளம்பரம், எல்இடி டிவி மூலமாக அமைத்து விளம்பரம் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் விளம்பரப்படுத்தப்படும்’’ என்றார். பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Stalin with you ,Collector ,Kalaichelvi Mohan ,District ,Stalin ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...