மதுரை, ஜூலை 15: மதுரையை அடுத்த அச்சம்பத்து பகுதியில் உள்ள நிலையூர் கால்வாயில் சேர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சோழவந்தான் அடுத்த முள்ளிபள்ளம் தடுப்பணையிலிருந்து துவங்கும் நிலையூர் கால்வாய் வழியாக பாணாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுகட்டான், நெடுங்குளம், பெருங்குடி கண்மாய்களுக்கு செல்கிறது. தென்கரை துவங்கி மேலக்கால் மடைதிறக்கும் இடம் வரை, மேலக்கால் துவங்கி காமாட்சிபுரம் பாலம் வரை, விளாச்சேரி முதல் பெருங்குடி கண்மாய் வரை என, மூன்று இடங்களில் 15 கி.மீ தூரத்திற்கு ரூ.13.50 கோடியில் தாழ்வான பகுதிகளில் கான்கிரீட் சுவர் கட்டுவது, குப்பை கொட்டுவதை தடுக்கும் விதமாக கம்பி வலைகள், சேதமடைந்துள்ள நேரடி மடைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.
எனினும், அச்சம்பத்து பகுதியில் புல்லூத்து பிரிவு பாலம் முதல் மதுரை – கன்னியாகுமரி சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டை சந்திப்பு வரை பல இடங்களில் கால்வாயில் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கும்போது நீரோட்டம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் புதர்மண்டி கிடக்கும் கால்வாயை சீரமைக்க முன்வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நிலையூர் கால்வாயில் புதர்கள் அதிகரிப்பு விரைந்து அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.
