×

போதைப்பொருள் ஒழிப்பில் சம்பவம் செய்யும் தமிழக காவல்துறை: அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சென்னை போலீஸ்

11 மாதங்களில் 1411 வழக்கு, 3778 பேர் கைது
67 கிலோ போதை மருந்துகள் பறிமுதல்

சிறப்பு செய்தி
தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதான கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தொடங்கப்பட்டு, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி கடந்த 5.8.2024 அன்று முதல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் ஒரு துணை ஆணையாளர், ஒரு உதவி ஆணையாளர், இரண்டு காவல் ஆய்வாளர்கள், ஐந்து உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 30 காவலர்கள் என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவினர் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் கஞ்சா மற்றும் செயற்கை போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களைப் பெற்று குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து, போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை முழுமையான செயல்படுத்தி வருகின்றனர்.

இப்பிரிவினரின் தொடர் முயற்சியாலும், தீவிர கண்காணிப்பினாலும், போதைப் பொருள் கடத்தி வருபவர்கள், போதை பொருட்கள் குற்றவாளிகளின் கும்பல்களை கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு காவல் துறையின் போதை மருந்து தடுப்பு பிரிவு (என்டிபிஎஸ்) கடந்த 11 மாதங்களில் (ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 7, 2025 வரை) போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்கும் பணியில் சாதனை புரிந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அமைக்கப்பட்டதற்கு பின்னர் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கைகளில் மொத்தம் 1411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளி வலையமைப்பு:
84 செயற்கை மருந்து வலையமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு 534 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூலம் சர்வதேச போதை மருந்து கடத்தல் சங்கங்களுடன் தொடர்பு உறுதி செய்யப்பட்டது. வளர்ந்து வரும் சவால்கள்: புதிய செயற்கை மருந்துகள், தொடர்ந்து மாறும் வேதியியல் கலவைகள், டிஜிட்டல் விற்பனை, சமூக வலைதளங்கள் மற்றும் டார்க் வெப், இளைஞர்கள் மத்தியில் பரவல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஊடுருவல், சர்வதேச கடத்தல், அண்டை நாடுகளின் வழியாக கடத்தல் உள்ளிட்டவை குற்றவாளிகளை கண்டறிவதில் சவாலாக உள்ளது.

தீர்வு முறைகள்: மறுவாழ்வு மையங்கள் நிறுவுதல், விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்துதல், கல்வி நிலையங்களில் கவுன்சலிங் வசதி, பெற்றோர்-ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சமூக தாக்கம்: இந்த நடவடிக்கைகள் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போதை மருந்தின் பிடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை காக்க, பெற்றோர்் தங்களின் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் – கடுமையான கண்காணிப்பு வேண்டும் சமூகம் – சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்

முன்னோக்கு: தமிழ்நாடு காவல் துறையின் இந்த தொடர்ச்சியான மற்றும் தீவிரமான முயற்சிகள் மாநிலத்தை போதை மருந்துகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் திசையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகின்றன. போதை மருந்து இல்லாத தமிழ்நாடு – இந்த இலக்கை நோக்கி மாநில காவல் துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

“போதை மருந்துகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் – பாதுகாப்பான தமிழ்நாடு உருவாக்குவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வையுடன் துவங்கிய “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” திட்டம் இன்று மாபெரும் வெற்றியைக் காண்கிறது.

முக்கிய சாதனை
கொடுங்கையூர் மற்றும் அருப்புக்கோட்டையில் இரண்டு பெரிய மெத்தாபெட்டமைன் உற்பத்தி கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டன. இந்த கூடங்கள் சர்வதேச தரத்தில் செயற்கை மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

வெளிநாட்டவர்கள் கைது
செயற்கை மருந்து வழக்குகளில் 25 வெளிநாட்டவர்கள் கைதாகினர், அவர்களில் நைஜீரியர் 23 பேர், கேமரூனியர் ஒருவர், சூடானியர் ஒருவர்.

The post போதைப்பொருள் ஒழிப்பில் சம்பவம் செய்யும் தமிழக காவல்துறை: அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சென்னை போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Police ,Chennai police ,Special News ,Tamil Nadu ,Chief Minister of Tamil ,Nadu ,Tamil Nadu Police ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...