×

₹60 லட்சம் காப்பீடு தொகைக்காக மாமியார் மீது கார் ஏற்றிக்கொன்ற மருமகன் உட்பட 2 பேர் கைது

திருமலை : ஆந்திர மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம், பெட்டா மசன்பள்ளியை சேர்ந்தவர் டல்லா வெங்கடேஷ், விவசாயி. இவர் தட்டிகொண்டாவை சேர்ந்த ராமம்மா என்பவரின் மகளை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ராமம்மாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.இந்நிலையில் விவசாயி வெங்கடேஷ்க்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினார். இதில் சுமார் ரூ.22 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. கடனை அடைக்க முடியாமல் தவித்த அவருக்கு விதவையான தனது மாமியார் பெயரில் காப்பீடு செய்து, அவரைக்கொன்று, அதை ஒரு விபத்தாக சித்தரித்து பணத்தை பெற திட்டமிட்டார்.

இந்த திட்டத்தின் படி மாமியார் தட்டிகொண்ட ராமம்மாவின் பெயரில் தபால் நிலையத்தில் ஆண்டுக்கு ரூ.755 செலுத்தி விபத்து காப்பீடு பெற்றார். இதன் மூலம் விபத்தில் இறந்தால் ₹15 லட்சம் காப்பீடு கிடைக்கும்.

இதேபோன்று எஸ்பிஐயில் ஆண்டுக்கு ரூ.2000 செலுத்தி விபத்து காப்பீடு பெற்றார். இதன் மூலம் ரூ.40 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும் விவசாயி காப்பீட்டிற்காக ரூ.5 லட்சம் பெறலாம் என தனது சகோதரன் கருணாகரின் பெயரில் இருந்த நிலத்தை மாமியார் பெயரில் பதிவு செய்தார்.

பின்னர், மாமியாரை கொல்ல கருணாகரின் உதவியை நாடினார். கருணாகர் ஏற்கனவே வெங்கடேஷிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தனது மாமியாரை கொல்ல உதவினால் பணத்தை திருப்பி தர வேண்டியதில்லை என்று வெங்கடேஷ், கருணாகரிடம் கூறியதால் அதனை செய்ய ஒப்புக்கொண்டார்.

திட்டமிட்டபடி கடந்த 7ம் தேதி மாமியார் ராமம்மாவை விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கொடுக்க அதிகாரிகள் வருவதாகவும், அதற்கு நீங்களும் நேரில் செல்லவேண்டும் எனக்கூறி வெங்கடேஷ் பைக்கில் அழைத்து சென்றார்.

முன்னதாக கருணாகருக்கு போன் செய்து, தனது மாமியாரை பெத்தமாசனப்பள்ளிக்கு அழைத்து வருவதாக கூறினார். கருணாகர் உடனடியாக ரூ.2,500 செலுத்தி சித்திப்பேட்டில் ஒரு காரை வாடகைக்கு எடுத்தார். கார் எண் தெரியாதபடி அதில் ஸ்டிக்கரை ஒட்டினார்.

பின்னர், துக்காபூருக்கு வந்து வெங்கடேஷ்க்காக காத்திருந்தார். திட்டமிட்டபடி வெங்கடேஷ், மாமியார் ராமம்மாவை, விவசாய நிலத்திற்கு அருகில் சாலையோரத்தில் உட்கார வைத்துவிட்டு நிலத்திற்கு சென்றார்.

கருணாகர் தனது காரால் ராமம்மாவை மோதி கொலை செய்து விட்டு பின்னர், அந்த ஸ்டிக்கரை அகற்றி சித்திப்பேட்டுக்குச் சென்று காரை ஒப்படைத்தார். தனது மாமியார் ராமம்மா அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துவிட்டதாக வெங்கடேஷ் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் முதலில் விபத்து என்று நினைத்தனர். அதன் பின்னர் ராமம்மா மீது விபத்து காப்பீடு செய்யப்பட்டு இருந்தது மற்றும் விபத்தை ஏற்படுத்திய கார் வாடகை கார் என்பதும் அதனை எடுத்து சென்றது கருணாகர் என்பதை போலீசார் அறிந்து அவர்களை பிடித்து விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ெதாடர்ந்து இருவரும் பயன்படுத்திய கார், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ₹60 லட்சம் காப்பீடு தொகைக்காக மாமியார் மீது கார் ஏற்றிக்கொன்ற மருமகன் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Dalla Venkatesh ,Petta Masanpalli, Siddhipettai district, Andhra Pradesh ,Ramamma ,Thattikonda ,Venkatesh… ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...