*படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஏற்காடு : வார விடுமுறை நாளான நேற்று, சேலம் மாவட்டம் ஏற்காடு, பூலாம்பட்டியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பூங்காக்களில் பொழுதை கழித்தும், ஏரி மற்றும் காவிரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வார விடுமுறை, பண்டிகை நாட்கள் மற்றும் மலர் கண்காட்சி நாளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வெண் மேக கூட்டம் மலை முகடுகள், தரையில் படர்ந்து, சாரல் மழை பெய்கிறது.
அவர்கள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, பகோடா பாயிண்ட், லேடிஸ் சீட், குகை கோவில், ஏரி படகு இல்லம், சேர்வராயன் கோயில் ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். மேலும், நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர்.
ஏற்காட்டில் சாரல் மழையும், வெண்மேக கூட்டம் அவ்வப்போது தரை தட்டியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். இங்குள்ள ஓட்டல்கள், பேக்கரி, தற்காலிக கடைகளில் ஸ்நாக்ஸ் விற்பனை களைகட்டியது.
திரும்பிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த இடமின்றி சிரமப்பட்டனர். கூட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டனர். ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, தவழ்ந்த சென்ற மேகங்களை படம் பிடித்தனர்.
அதேபோல், இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் நேற்று சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீர்மின் கதவணை வழியாக தண்ணீர் நுங்கும், நுரையுமாக இருகரைகளை தொட்டவாறு பாய்ந்து ஓடிய தண்ணீரை பார்த்து ரசித்தனர். கார், வேன், டூவீலர்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். கைலாசநாதர் கோயில், காவிரி படித்துறை, மாட்டுக்கார பெருமாள் கோயில், மூலப்பாறை பெருமாள் கோயில், கதவணை பாலம் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்துக்கொண்டனர். இதையொட்டி, பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கரை கால்வாயில் விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பில்லுக்குறிச்சி கிழக்கு கரை கால்வாய் படித்துறையில் நேற்று வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தண்ணீர் குறைவாக செல்வதால் குடும்பம் குடும்பமாக குளித்தும், நீச்சல் அடித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து ஆனந்த குளியல் போட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையிால் தற்காலிக கடைகளில் மீன் வருவல், உணவு விற்பனை களை கட்டியது.
The post வார விடுமுறை கொண்டாட்டம் ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.
